Wednesday, 31 December 2014

சினம் கொள்ளடா!!


சினம் கொள்ளடா!!


பாகன் கோற் கிணங்க...
   பாய் போலுடல் மடங்க..
பாயும் வேங்கை பணியும்..
   பயமதை கண்ணில் அணியும்..

அடிமைத்தனம் மறுக்க.. அது
   அச்சக் காப் பறுக்க..
அகக் கூண் டுடைய..
   ஆறா சினமது அடைய....

பிணி துறந்த புலி.. பாருடன்
   பிணைந்து ஏற்கேன் வலி..
பரிதவிக்கிறேன்! காண, இக்காட்டை,
   பாகனிடம் படும் பாட்டை..

செவி சாயேனே வணங்கி..
   செய்யேன் அவன் சொற்கிணங்கி
செல்லிட மெல்லாம் கொள்வேன்..
   செம்முகமோடு உறுமச் செல்வேன்..

சினமது பொங்கி வழிய.. விழியில்
   சிக்கிய யாதும் அழிய..
சிந்தையில் போர்கள் வெடிக்க.. சொல்லால்
   சிதைக்க நாவது துடிக்க..

கட்டியெனை ஆள துண்ணிடுவாயோ! காலக்
   கரமதில் விலங்கிட எண்ணிடுவாயோ!
கழிவறை காகிதமாய் போகேன்! நின்
   காலணித் துடையென்றும் ஆகேன்!

குற்றம் பல இழைக்க.. எனை
   குணியச் சொல்லி அடிக்க..
குறுகியடி பணிவேனென நினைக்க..
   குமுறி எரிமலையாய் நான் வெடிக்க..

சிதறடித்துன் செருக்கை அழிப்பேன்!
   சிறுதுளியேனும் புரட்சித் தேனளிப்பேன்!
சினமே என் போர்வாள்! என்றும்
   சிரமது காணாது உன் தாள்!

Monday, 29 December 2014

தளராதே தளிரே !!!



தளராதே தளிரே!!!


விழி பிதுங்கி நின்று நீயும் 
கலி என்று குறை கூறி 
பழி பல ஏற்று நின்று 
வழி தவறி சென்றதேனோ ?

வேலை தேடி அலைந்த நீயும் 
கிளை தாண்டும் குரங்காக 
வேளை உணவு கிடைக்காமல் 
சிலை போல் அசைவிழந்ததேனோ ?

பயிற்சி பல மேற்கொண்டு 
அயர்ச்சி அடையாத நீ 
முயற்சி சிலவே மேற்கொண்டு 
தளர்ச்சி அடைந்ததேனோ ?

ஞாலம் அது சுற்றுவதைக் கண்டு 
காலம் அது மாறுமென நம்பு 
பாலம் ஒன்று வானிற்குக் கட்டி 
வர்ணஜாலம் பல அமைத்திடு - வெற்றிக்கொடி நாட்டி !

மை தீர்ந்த பேனா .....


மை தீர்ந்த பேனா ....


பொய் தீர்ந்து போன என்னால்
காதல் கவிதை தீட்ட முடியாமல் போக

மெய் தீரவில்லை....படைத்திடுவாய் 
புதுக்கவிதை ஒன்று நீயாக - என

கை பிடித்து உணர வைத்த 
எனது மன சாட்சிக்காக

வாய் சொல்லும் இக்கவிதையைப் 
படித்திடுவாயோ என் வாசகனாக

காய் பழுத்து பழமாகும் 
வரை காத்திராதே...

வேர் விடும்போதே  உன் 
வியர்வை சிந்தத் தொடங்கட்டும்

அதுவே போர்க்களத்தில் உன் உதிரம் 
சிந்தவிடாமல் பிடித்துக் கொள்ளும் பாத்திரம்

மை தீர்ந்து போவது - நீ
உன் சிந்தனையை சிறை பிடிக்க அல்ல

அதுவே நீ ஓடப்போகும் தூரத்தை 
கணிப்பதர்க்கான அளவுகோல் !!

இது யார் பாடல் ??




இது யார் பாடல் ??



அர்த்தங்கள் ஆயிரம் சொல்லும் 
கண்ணதாசன் பாடல்
அர்த்தநாடமும் ஆடச்செய்யும் 
விஸ்வநாதன் பாடல்
அடிக்கடி கேட்க வைக்கும் 
இளையராஜா பாடல்
அறுபதிலும் ஆறை கவரும் 
வாலி பாடல்
அகிலங்கள் சிலிர்க்க வைக்கும் 
வைரமுத்து பாடல் 

அலையாய் வந்து கரை தீண்டி போகும் 
ரகுமான் பாடல்
அலர்ஜி போல் தோற்றிக் கொள்ளும் 
ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்
அண்ணன் பாசம் உணர்த்த மறக்காத 
யுவன் ஷங்கர் ராஜா பாடல்
அலேக்காய் தூக்கிச் செல்லும் 
அனிருத் பாடல்

Saturday, 20 December 2014

சாதியா? இருக்கா?



சாதியா? இருக்கா?


"உளரும் பேதைக்கு மதியும் பாதி..
உலகமே மாறிடிச்சு! எங்கேடா சாதி.?
உறவாய் வாழும் இத்தேச வாசி..
உடைக்காதே ஒற்றுமையை சாதி பேசி!"--
"உண்மையா சொல்லு! இருக்காடா சாதி?"

ஏதும் அழுக்கற்று துவைத்திடு சாக்க..
ஏனின்னும் 'மாமி' வரல சமைக்க.?
ஏம்மா 'பிரியா' பாத்ரூம அலம்பிறேன்..
ஏங்க! 'ஐயர் மெஸ்'ல வாங்கி வரேன்..--
"ஏன்டா! இதுலயா இருக்கு சாதி?"

வா 'ராஜா' இல்லத்துள் வந்தமரு..
வரண்டிருக்கும் நா.. சொம்பு நீரருந்து..
வரேன்! இந்த சொம்ப 'அலம்பிடுறேன்'..
வாடகைக்கு 'பிராமணா' யாராச்சு காட்டிடேன்..--
"வர்ணம், சாதிலாம் எங்கயும் இல்லடா!"

பறையன் பாதிய பிடுங்கிக்கிறான்! பார்ப்பீர்!
பார்ப்பனர் நிலையென்ன!? நன்றாக கேட்ப்பீர்!
பாரதத்தில் இல்லையே திறனுக்கு மதிப்பு!
ஃபாரினுக்கு போனாதான் ஓடும் பிழைப்பு!--
"பாவி! சாதியா? இது நியாயம்!"

'சாமி', சலவைக்கு ஏதாச்சும் துணி?
'சாமி', வேணுமா? வாங்குங்க! எக்கனி?
'சாமி', சார்ட்டா? மீடியமா? முடி?
'சாமி', பரிகாரம் பண்ணுவது எப்படி?--
"சாமீ...! சாதி எங்க? சொல்லுடா!"

சேரி! செல்ல வேண்டாம் அவ்வழி..
சேறு, சாக்கடை, நாற்றம்! அம்மாடி!
'சேமமே' இல்லா மனுஷா! இவா நடுவுல..
சேவிக்கும் பகவான் காப்பார் நம்பள!--
"ச்சேரீ.. இதுவா சாதிக் கொடும?"

உண்பது சாம்பார், ரசம், மோரு..
உலகமே சைவமா மாறுது பாரு..
உயர்ந்தது! சத்துகள் நிறைந்ததோடு.
உடலுக்கு என்றும் உகந்த சாப்பாடு..
"உணவுலையா இருக்கு சாதி?"

ஆருயிரே நினை நீங்க மனமில்லை..
அம்மா 'நம்மவாள கட்டிக்கோ'னு தொல்லை..
அதனால காதல் வாழ்வை மறந்திடலாம்!
அடுத்த ஜென்மத்தில் பிறப்பால் சேர்ந்திடலாம்!--
"ஆனா.. இது சாதின்னா அர்த்தம்?"

"பூநூலுடன் பார்ப்பனன் இணைந்ததுபோல் இம்மடமை..
புதுவுலகுடன் பின்னியது சாதிக் கொடுமை..
'புரியலயாடா? நீ என்ன பறப்பயலா?'
புண்ணியம் தரும் இத்தகைய செயலா?"--
"புரியுது! ஆனாலும் சாதி இல்லல?"

Sunday, 30 November 2014

சீயான்..


சீயான்..


தமிழ் சினிமாவுக்கு சாதுவாய் வந்த 'சேது' நீ..
உலக அழகி ஐஸ்வர்யா 'ராயை'யே 
தூக்கிச் சென்ற எங்கள் 'சமுராய்' நீ..
ஆசாமியாய் 'சாமி'யில் நடித்து..
சாமியாய் 'கந்தசாமி'யில் நடித்த 'அந்நியன்' நீ..
தமிழ் சினிமாவில் உன் பயணம் ஒரு 'இராஜபாட்டை'..
என்றும் நாங்கள் பாடுவோம் இந்த 'பிதாமகனின்' பாட்டை..
உன்னுடைய 'தில்' ஒன்றே..
நீ என்றும் 'தூள்' கிளப்பக் காரணம்..
'பீம' பலமாய் உம ரசிகர்கள் யாம் இருக்க..
என்றைக்கும் எங்களை ஆளும் 'கிங்' நீ..  

Wednesday, 19 November 2014

தொலைவில் நிற்கும் காதல்


தொலைவில் நிற்கும் காதல்


கடல் தாண்டி வரும் 
இந்த மடல்..
நீ உடல் நலமா என அறிந்திடவே..
மதில் மேல் நிற்கும் பூனையாய். இங்கு உன் 
பதில் மேல் எதிர்பார்த்திருக்கிறேன்..
உன் செல்ல இம்சைகள் இல்லா இரவுகள் 
இங்கு இருண்ட அமாவசையாய் நகர்கின்றன.
நீயின்றி இங்கு காற்று கூட குளிர்ந்திட,
வேற்று கிரகமாய் மாறுகிறது என் உலகம்.
தீபம் ஏற்றும் வேளையிலே,
கோபம் ஏற்று சென்ற தேனே..
அங்கு நீ வானவில் கண்டிட,
இங்கு நான் வருணனை வருடினேன்..
எம் புலனை அடக்க நீயின்றி இங்கு..
இக்கவிதைக்குள் 
ஐம் புலனை அடக்க நான் இங்கு தவிக்கிறேன்.

Saturday, 25 October 2014

தேவதையின் முதல் பார்வை


தேவதையின் முதல் பார்வை

இளவேனிற் காலம், விடியற் காலை நேரம்..
காற்றை துணை கொண்ட நடை சாலை ஓரம்..
குடிலொன்றின் வாசலில் அக்கன்னியைக்  கண்டேன்.
கதிரவன் உதித்திட நான் உரைந்து நின்றேன்..

முகில் கிழிக்கும் எல்லொளி கண் கூச..
முடித்திரை நீங்கி உன் பார்வை என் மேல் வீச..
அதிகாலை நிலா விரைந்து மறையக் கண்டேன்..
அம்மதியைத் தாண்டிய நாணம் நான் கொண்டேன்..

காவியங்கள் உன் மீது படைக்கச் செய்வாயோ? அதை
பாட எண்ணிட, பார்வையால் சுவாசம் கொய்வாயோ?
குயிலை அழைத்தேன் உன் மேல் கானம் இயற்ற..
அது கூறியதா என் காதல் கூற்றை?

இறை நூறும் அளிக்கும் அருட்காட்சி..
மறை நான்கும் செப்பும் மனதின் இறையாட்சி.. யாவும்
கண்டேன் அக்கள்ளியின் கயல் விழியில்..  பல
காலத் தவ மோட்சம் கிட்டியது நொடியில்..

களிப்புற்று விண்ணில் உலாவும் புள்ளினம்.. அவள்
கண்டதும் அவையோடு சேர்ந்து பறந்ததே என் மனம்..
நெகிழும் தேன்மலரை சேரும் வண்டின் தாகம்- அது போலே
என் நெஞ்சம் அவள் மேல் கொண்ட பெரும் மோகம்..

விழியிருந்து பாய்வது காதல் வாளோ? அதை
வீசி என் நெஞ்சை சிறை எடுத்தாளோ?
பதுமை, இவளென் தேவதையாய் ஆகிடனும்.. மேனி
வருடுவது காற்றல்ல அவள் விரல்களாய் மாறிடனும்..

எழில் தீயே என்றாயினும் உனை நெருங்கிடுவேனோ?
என்றும் அதில் குளிர் காயும் வரம் பெறுவேனோ?
முனையாது உன்னழகில் வாய் பிளந்திடுமோ? அதை
மூடிட உன் செவ்விதழ்கள் முன் வந்திடுமோ?

Friday, 10 October 2014

வாய் திறவாய்

 

வாய் திறவாய்

'பேசு' 'செப்பு' 'சொல்' 'உரை' 'கூறு'-உன்னை
பேசச் சொல்லிடவே தமிழில் சொற்கள் பல நூறு!
வாய் திறந் தெதையும் உரைக்கலாம் என்ற வலிமை
வாழ்கை நமக்கு அளித்திட்ட மிகப்பெரும் உரிமை.

இனிச்சொல்லால் புன்னகை பரவிடுமே பல திக்கும்
கனிச்சுவை சேர் தேன் கலந்த சுவை கடந்து தித்திக்கும்..
சிந்தை கொண்ட இன்னலெல்லாம் மறந்து மனம் நெகிழும்
உவகைப்பூ பூத்து அளவில்லாது நெஞ்சம் மகிழும்..

ஊக்கச்சொல் ஒன்றால் துவண்டவன் எழ.. உன் பேச்சால்
உறங்கும் மனங்களெல்லாம் முயற்சியை தொழ.. அந்த
வார்த்தைகளின் வலிமை வெற்றி வழியை காட்டும்..
இரவினை பகலாக்கி இருளினுள் ஒளிக்கதிரூட்டும்..

எழுச்சி சொற்கள் பகுத்தறிவு தீயை தூண்டிட-மக்கள்
மனக்குகையில் சிறுத்தை எழ, சமத்துவத்தை வேண்டிட.
பேசிடவே நெஞ்சமெல்லாம் விடுதலைக்கே துடித்திட-உன்
பேச்சினால் நகர்ந்து பெரும் மக்கட் புரட்சி வெடித்திட..

செவியதன் கேள்வி, விழியுறை காட்சி-இவை
ஏதும் அடக்குமோ உன் புலன்களின் ஆட்சி?
உன் சுதந்திரமெல்லாம் நீ உரைக்கும் சொல்லாகும்-அதை
அறிந்து பேசினால் அதுவே விஜயன் வில்லாகும்!

 

Sunday, 28 September 2014

அவளே என் பரிசு!

அவளே என் பரிசு!

கொட்டும் பறை, ஆட்டம், கோலாகல கூட்டம்..
கொஞ்சு தமிழ் கானம், குதுகல கொண்டாட்டம்..-இவை
ஏதும் இன்றி களிப்புற்ற என் நெஞ்சு- அது
ஏனென்றால் என் தேவதையை நான் சேரும் தினம் இன்று..

பிறந்த நாள் இன்றோ நான் என்றோ தோன்றியதாலே? நான்
பிறந்ததே இக்கணம் தானோ உன்னை கண்டதாலே? ஒரு
குழந்தையை மாறி உன் கையில் சேர ஆவலே! என்னை
கொஞ்சி விளையாடி நீ முத்தமிட ஆசையே!

முக்கனியுடன் தேனும் சேர் கூட்டு அதன் அருமை..
முத்தமிழும் செப்பும் என் தாய்மொழியின் இனிமை.. எதும்
பூமகள் உன் பேச்சுக்கு ஈடில்லை.. பெண்மானே! நான்
பூவுலகில் உதிததேல்லாம் அதை கேட்டு இரசிக்கத்தானே!

மெத்தை மேல் விழுகிற ஓர் சிறகினைப் போலே.. அவள்
மெல்லிய உதட்டின் மேல் என் வாய் பதிந்துவிட்டாலே..
பண்டம் பலகாரம் யாதையும் நாவும் வெறுக்கும்! என்னை
பற்றிய செவ்விதழின் சுவை எப்படியா மறக்கும்?!

இராஜ இராஜனின் வாளும்.. இளங்கோவின் பெரும் காவியம்..
குமரிக்கடல் முத்தும்.. தஞ்சையின் அழகு ஓவியம்.. இவை
எல்லாம் பெற்றதால் நான் இன்பக் கடலில்.. அத்திளைப்பு
என்னவளின் வருகையால் கிட்டியது ஒரு நொடியில்..

Wednesday, 24 September 2014

கலங்காதே பெண்ணே

கலங்காதே பெண்ணே

பகலை இரவாக்கிட்ட மது
இரவை பகலாக்கிட்ட மாது
பொழுதை களவாடிய சூது

வெறிச்சோடிய வீட்டின் வாசலிலே..
வெயில் தாக்கும் சுண்ணாம்பு பூசலிலே..
அவள் கண்ட கனவெல்லாம் ஊசலிலே..

உட்காந்திருந்தா ஒருத்தி கையில் பிள்ளையோட..
தலையில் பல நாள் வாடி போன முல்லையோட..

கும்பிட்ட தெய்வமேதும் கைகொடுக்கவில்லை..
நம்பிட்ட உறவு ஏதும் செவி சாய்க்கவில்லை..

அழுது அழுது வறண்டு போன அவள் கண்கள்..
இன்றைக்கும் பல குடிசைகளில் ஒளி இழந்த விண்மீன்கள்..

பழித்திட நீயொன்றும் கோழையல்ல..
விழித்திடு பெண்ணே விழித்திடு..
அவனுடைய முகத்திரையை
கிழித்திடு பெண்ணே கிழித்திடு..

ஒரு பெண்ணால் ஆகாத காரியம்
அந்த இறையாலும் ஆகாது..
நீ அடி வைக்காவிட்டால்
இந்நிலை என்றும் மாறாது..

Thursday, 11 September 2014

பேசிடாத வார்த்தைகள்..

 

பேசிடாத வார்த்தைகள்..

ஜெயங்கொண்டான் பேச வார்த்தைகள் அதிகமில்லை..
கீழே விழுந்தவன் பேச வார்த்தைகள் அதிகமுண்டு..

மருத்துவன் பேச வார்த்தைகள் அதிகமில்லை..
மரணப்படுக்கையில் இருப்பவன் பேச வார்த்தைகள் அதிகமுண்டு..

கேள்வி கேட்ட ஆசிரியை பேசிட வார்த்தைகள் அதிகமில்லை..
பதிலறியா மாணவன் பேசிட வார்த்தைகள் அதிகமுண்டு..

வழக்கறிஞன் பேசிட வார்த்தைகள் அதிகமில்லை..
நீதிபதி பேசிட வார்த்தைகள் அதிகமுண்டு..

தந்தை பேசிட வார்த்தைகள் அதிகமில்லை..
மகன் பேசிட வார்த்தைகள் அதிகமுண்டு..

அர்ச்சகர் பேசிட வார்த்தைகள் அதிகமில்லை..
பக்தன் பேசிட வார்த்தைகள் அதிகமுண்டு..

காலங்கலமாக தொடரும் ஒரு அரசியல் இது..
இடம் மாறி நிற்கும் மானுடனின் நிலை இது..

காலம் மாற மாற..
ஞாலத்தின் இந்நிலையும் மாறும் என நம்புவோம்..

 

Wednesday, 27 August 2014

நாணயம்

நாணயம்

மனிதனை இணைப்பது நாணயம்..
     மக்களை வளைப்பது நாணயம் ..
கட்டில் தோன்றிய நாணயம்..
     கடவுள் ஆயிட்ட நாணயம்..

மன்னர்கள் முகம் பதித்த நாணயம்..
     நாட்டின் சின்னம் பதித்த நாணயம்..
பற்பல உலோகமாலான நாணயம்..
     இல்லாரை உலோகமாக்கும் நாணயம்..

கலைகள் படைத்த நாணம்..
     மலையிலும் தேடப்படும் நாணயம்..
வாழ்வு முழுவதுமே நாணயம்..
    வாழ்கையை முடிப்பதே நாணயம்..

Friday, 15 August 2014

தொழிலாலியா? முதலாளியா?

தொழிலாலியா? முதலாளியா?


மன்னரைப்போல் வாழ்ந்திடவே அங்கும் இங்கும் ஓடுவார்..
     பணத்திற்கு நிம்மதியை விலையாகப் பேசுவார்...
புறத்தினிலே சிரிதிருந்தி அகத்தினிலே அலறுவார்..
     புரியாத புதிர்தானே முதலாளிக் கூட்டமே!

ஒருவேளை உணவிற்கே நாள் முழுதும் உழைத்தாலும்
     அவ்வுனவை அமிர்தமென எண்ணியே உண்ணுவார்..
சோர்ந்தாலும் மனதினிலே அமைதி கொண்டு தூங்குவார்..
     சுதந்திரக் காற்றடா தொழிலாளர் வர்க்கமே!

உடலாலே உழைக்காமல் மனக்கசப்பை கொண்டிருத்தல்..
     இது போன்ற நிழல் வாழ்வே நல்வாழ்வா? கூறடா..
நிம்மதியை வாழ்ந்து வரும் தொழிலாளர் வாழ்க்கையே
     கடலைவிட சிறந்ததென நீ முழங்கிக் கூறடா!!
 


Tuesday, 22 July 2014

மாண்டது "தமிழ்"


மாண்டது "தமிழ்"

கடலுக்க் போன மாமனுக்கு..
காத்துக் கிடக்குற பொண்ணு நான்..
அலைகள் கரைக்கு வந்து வந்து போக..
துணையா மீந்து கிடக்கும் இந்த மண்ணு தான்..
மீன் வாசம் அடிச்சிருந்த கரை..
ஏன் இப்படி வெறிச்சுப் போச்சோ..?
குற்றமற்ற தமிழனைக் கொல்லுதலுக்கு..
முற்றம் போடுவது தான் யாரோ..?
கோடி உயிர்களை கொன்று குவித்த..
எங்கள் ஈழத்தை போட்டு எறித்த..
பல்லாயிரத் தமிழர்களை அனாதை ஆக்கி..
அவார்கள் உடலையும் மனதையும் தாக்கி..
துன்புறுத்தும் உம்மிடம் யாம் கொண்ட
அன்பை அறுக்கும் முடிவுக்கு வந்தேன்..
அமைதி காக்க காக்க.. நீ 
அகதிகள் எண்ணிகையை கூட்டுகிராயோ..?
உலக நாயகன் கூறியது போல்..
தீவிரவாதத்தை ஒழிக்க தீவிரவாதம் தன் ஒரே வழி..!
ஒளிந்து கொள்ளடா கோழையே..
தமிழன் வீசுகிறான் தன் வாளையே..!

Sunday, 20 July 2014

எட்டியதும் கிட்டியதும்..


எட்டியதும் கிட்டியதும்..


சிறகுகள் கட்டி விண்ணில் பறந்தேன்.. 
சீறி சூரியனை நோக்கி விரைந்தேன்..
கட்டிய சிறகோ மெழுகென மறந்தேன்.. அது 
உருகி விழுந்திட நெஞ்சம் கரைந்தேன்.

கனவுகள் வளரும் முட்டைகள் இட்டு
கண்களெனும் கூட்டில் அடை காத்திட்டு.. அவை
பொறியும் நேரம் நெருங்கிட, கலைந்தது
கூடு, முட்டையெல்லாம் நொறுங்கி உடைந்தது..

ஆசையெனும் மது தரும் போதையிலே..
அண்டம் மறந்து மிதக்கும் வேளையிலே..
உடமையெல்லாம் உலகம் உருவி கொண்டது.. சிறு
உடையும் இல்லாது தெருவில் விட்டது..

வாழ்வெனும் மரத்தின் மகிழ்ச்சிக் கனிதனை..
வசமாக்க எண்ணி உடைத்தேன் என் மனதினை.. அது
எட்டாக் கனியென புரியாதது ஏனோ? 
என் தரத்தை நானே அறிந்திடத்தானோ?

ஆசை கொள்வதெல்லாம் முடிவில் அழுதிடத்தானோ?
கனவெல்லாம் விழிகளில் வசிக்கும் வெறும் கற்பனையோ?
"இன்பமயம்" என்பது  ஏட்டுச்சொல் தானோ?
ஆழ்கடலில் ஆற்று மீனை தேடுகிறேனோ?

Monday, 14 July 2014

"மதம்" பிடித்த மிருகம்


"மதம்" பிடித்த மிருகம்


இறைவனின் பேரில் புரிந்தோமே பல யுத்தம்..
ஒடுக்கப்படோர்க்கு கொடுமைகள் இழைத்தோமே நித்தம்..
கேட்கிறதா வலிக்கும் அவர் மனதின் சத்தம்?
போதுமடா இந்த மண் மேல் சிந்திய இரத்தம்..

மத வெறியை மக்கள் மனதிலே விதைத்தோம்..  
சிறுபான்மையினரை சினம் கொண்டு வதைத்தோம்.. 
மதசார்பின்மை என்ற சொல்லையே சிதைத்தோம்...
மனித நேயத்தை மண்ணோடு மண்ணாய் புதைத்தோம்..

என் மதமே பெரிதென கூறிடும் சிறுமை..
ஏனிந்த வீணான வெட்டிப் பெருமை?
உனையே உயர்வாய் கூற ஏது உனக்கு உரிமை?
இச்சிந்தை காட்டுவது நம் சிரத்தின் வெறுமை..

"மதம்" கொண்ட மிருகமாய் மாறிடாது தடுத்திடு..
மனிதரை மனிதரே அழிப்பதை நிறுத்திடு..
மற்றவரின் நம்பிக்கைகளை மதித்திடு..
மண் மேல் அனைவரும் சமமென நினைத்திடு..

Saturday, 12 July 2014

இல்லாமல் போன இல்லாதவர்கள்


இல்லாமல் போன இல்லாதவர்கள்


பாதை மறந்தவன் 
போதையுடன் படும் பாட்டு இது...
பாதி உயிருடன்
சேதி சொல்ல வந்தவன் கூற்று இது..
கல் சுமந்து மண் சுமந்து..
படி ஏறி படி இறங்கி..
தனக்கு ஒவ்வாமை என தெரிந்தும்..
கண்ணிமை மூட நேரமில்லா வேலை கொண்டான்..
மாடாய் உழைத்தான்..
ஓடாய் தேய்ந்தான்..
கட்டிடம் சாய்ந்ததோடு..
தானும் சாய்ந்தான்..
தரம் தாழ்ந்த அவன் முதலாளியை பார்த்து
கரம் உயர்த்தி கேள்வி கேட்க கரம் இல்லை ஒருவனுக்கு..
கொடுக்கப்பட வேண்டிய இருபது லட்சம் சம்பளம்..
உள்ளே புதைந்துள்ளதென்ற செய்தி அம்பலம்..
அங்கே புதைந்தது ஒருவனின் மனித நேயமும்..
போரூரில் நடந்த இத்துயரம்..
எத்துனை ஆருயிரை கொண்டு போன உயரம்..
என்றும் சொல்லி மாளாது..
குற்றவாளியின் அன்மா நீடு வாழாது.. 

Thursday, 12 June 2014

அந்த அழகிய மாலை பொழுது..


அந்த அழகிய மாலை பொழுது..


கரிய மேகங்கள் கண்ட மயில் போல் 
வாடைக் காற்றில் அசைந்தாடும் கிளைகள்..
காதல் கொண்ட இளைஞனின் மனம் போல்
காற்றில் பறந்தாடும் வாடிய இலைகள்..
இருளை கூட்டி வரும் குளிர்ந்த இரவை
அஞ்சி கூட்டிற்கு ஓடிடும் பறவை..
இந்த அழகு மாலையில்
நகரச் சாலையில்
உலகையே மறந்து நான் நடை போட..
எங்கோ கேட்டிடும் 
இன்ப ஓசையில்
மனமது நெகிழ்ந்து இமைகள் மூட..

பருவ நங்கையின் அழகு புருவமோ 
அந்தி மாலையில் தோன்றிடும் பிறை ..?
மழலைக் கண்ணனின் திரு உருவமோ 
கொஞ்சி விளையாடும் சிறுவர் படை..?
கண்களை பறித்திடும் பூக்களின் வாசம்..
ஊரெங்கும் பூக்குது காதல் நேசம்..
சில ஓவியம்..
பல காவியம்..
எதும் கூறிடாது இந்த அழகை..
இந்த தருணம்..
நாளும் வரணும்..
சொர்க்கம் ஆக்கணும் இந்த உலகை..

முக்கனிச் சுவையை கூட்டிடும் தேன் போல்
பாடிடும் குயிலின் இன்னிசை இராகம்..
கதிரவன் முகத்தை மறைத்திடும் மலைகள்-அந்த
காட்சியை காணவே நெஞ்சினில் மோகம்..
பொன்மாலை இதை போற்றும் என் கானம்-அதை
கேட்டு நாணத்தில் சிவக்கும் கீழ்வானம்..
இந்த இன்ப மாலையில்..
எழில்மிகு வேளையில்..
தனிமையில் இன்பம் காண்பதா அழகு.?
பேசி களிக்க..
மனம் விட்டு சிரிக்க..
புதுப்புது உறவை தேடிப் பழகு.. ;) 

Wednesday, 11 June 2014

முண்டாசுக்கவி


முண்டாசுக்கவி


முறுக்கி விட்ட மீசையும், முண்டாசும் வேட்டியும்
அடிமை பூட்டை உடைத்தெறியும் சொற்களெனும் ஈட்டியும்
ஏந்தி இவன் பாடி வர மாற்றம் கண்டது இப்புவி.
தமிழ் மொழியின் புதுக்கவிதை சின்னம், இவன் "மகாகவி"

ஜகத்திலே உளோரெல்லாம் வீறு கொண்டு எழுந்திட.
அகத்திலே புரட்சி தீ எரிந்து நம்மை விழுங்கிட
முகத்திலே துணிச்சலோடு ஒளி படைத்த கண்ணுடன்
கிரகத்தில் யாரும் கண்டிரா பல கவி படைத்த நாயகன்.

"நிறத்தினால் சக தோழர் தாழ்ந்துதான் போவரோ?"
"புறத்தினால் பிரித்து வைக்கும் நீயும் என்ன மூடரோ? " என
சிரத்திலே உறைக்குமாறு கேள்வி பல கேட்டவன்.
கரத்திலே கோலேந்தி சாதி களை எடுத்த பாடகன்.

அணை உடைக்கும் வெள்ளம் போல் பொங்கிடும் காதல் ராகம்
துணை இவனே கன்னனுக்கென இவன் கொண்ட மோகம்
"உனை பாடிடவே தோன்றினேன், நித்தம் ஜபிப்பேன் உன் நாமம்" என்ற 
இணையில்லா இவன் பாடல்களால் நெஞ்சிலே காதல் தாகம்.

குருதியெல்லாம் பொங்கிட விடுதலைக்கே ஏங்கிட
உறுதியோடு நின்று நம் உரிமைக்கு போராடிட
இறுதி மூச்சு உள்ள வரை இடைவிடாது உழைத்தவன். நம்மை
இணைத்திடும் பல பாட்டு படித்த கவி, இவன் மாவீரன்.

வில்லுக்கோர் விஜயன், தமிழ் சொல்லுக்கோர் அகத்தியன்.
படை என்றால் சோழன், கொடை எனில் பாரி வேந்தன்.
குறளுக்கு வள்ளுவன், கீதைக்கு பார்த்த சாரதி.
எத்துனை யுகமாயினும் தமிழ் பாட்டுக்கென்றும் "பாரதி"


Monday, 9 June 2014

ஈடில்லா உலக நாயகனே!!


ஈடில்லா உலக நாயகனே!!


தமிழ்த் திரையுலகை "ஆளவந்தான்"..
"தெனாலி"யை போல் குசும்பும் கொண்டான்..
"உன்னைப்போல் ஒருவன்" யாருமில்லை இங்கு..
"விஸ்வரூபம்" எடுக்கிறது திரை உகில் உன் பங்கு..
நீ "இந்தியன்" என்பது எங்கள் பாக்கியம்..
அதர்மத்தை எதிர்த்து "குருதிப்புனல்" கிளப்பும் உன் வாக்கியம்..
உன் "குணா"திசியன்களால் எங்களை ஈர்க்கின்றாயே..
தமிழ் திரை உலகின் "சண்டியர்" என்றும் நீயே..
நீ எறியும் "மன்மத அம்பு"களால்..
"பதினாறு வயதினிலே" பெண்களெல்லாம் ஏங்குவர்..
உன் "சிகப்பு ரோஜாக்களு"க்காக..
யாருக்கு தான் உன் "காதல் பரிசு"(ஓ)..
உம்முடன் பிறக்கா "அபூர்வ சகோதரர்கள்" நாங்கள்..
எங்களை என்றும் வழி நடத்திச் செல்லும் "நாயகன்" நீ..

Sunday, 8 June 2014

உழைப்பவனின் உதிரம்..


உழைப்பவனின் உதிரம்..


உள்ளங்கை சிவக்க உழைத்திடும் தோழர்க்கு- முடிவில் 
உதிரம், வலி,கண்ணீர் மட்டுமே மிஞ்சுவது..
ஊணை உருக்கி உழப்பது நம் தொழிலாளி-அவரை 
வாட்டி வதைக்கிறார் நம் "வள்ளல்" முதலாளி..

மறுத்திடுவாயோ உன் இலாபத்தை பகிர்ந்திட?
அறுப்பது நீயோ வேறொருவன் விதைத்திட?
கொடுப்பது உனதோ 'கொடை' போலே எண்ணிட?
தடுப்பது முறையோ அவர் வாய்ப்பை, வளர்ந்திட?

பகட்டாய் வாழவே அனுதினமும் அலைகிறோம்.
திகட்டும்போதும் செல்வம் சேர்த்திடவே முனைகிறோம்.
"வலியவன் வெல்வான்" என வாய்ப்புகளை பறிக்கிறோம்.
வலிமையை வளர்த்திட வாய்ப்பு எங்கே அளிக்கிறோம்?

உழைப்பாளர் யாவரும் ஒன்று கூடுவோம்- தோழா!
உரிமையாய் நமதென்பதை எடுத்துக் கொள்ளுவோம்!
உலகம் சுழல்வது உழைக்கும் மக்களால்- அது 
ஆளப்ப்பட வேண்டும் அவர்கள் கைகளால்!  

Saturday, 7 June 2014

வெந்து போயின இவன் பிஞ்சு விரல்கள்..


வெந்து போயின இவன் பிஞ்சு விரல்கள்.. 


வாடிய முகத்துடன் ஒரு தொழிலாளி..
ஓடி விளையாட வேண்டிய வயதில்..

கடமையை இச்சிறுவயதில் சுமத்தும்,
மடமையை என்னென்று கூற?

பட்டாசு வெடிக்க துயில் கொள்ள வேண்டியவன்,
பட்டாசு ஆலையில் துயில் கொள்கிறான்.

அவ்வப்பாவிச் சிறுவன் மீது சில்லறைகள் வீசப்படும்..
வேலையில் தவறென்று நொடிபொழுதும் ஏசப்படும்..

மிட்டாய் சுவை இனிப்பென்று தெரிந்த நமக்கு, அதை 
விற்பவனுக்கு அது கசப்பென்று ஏன் தெரியவில்லை?

குழந்தையை தொழிலாளி ஆக்கும் இந்த பொம்மலாட்டம்..
நாம் அனைவரும் கை கொட்டி பார்க்கும் களியாட்டம்..

Friday, 6 June 2014

மாமே! இது நம்ம சென்னை!



மாமே! இது நம்ம சென்னை!



பஸ் பிடிக்க கோயம்பேடு..
படியில் நின்னு கானா பாடு..
ஸ்லிப் ஆனா காசிமேடு..
வேணா மச்சி உள்ள ஓடு..

"சௌ"ண்டு னா பச்சையப்பா..
"மௌ"ண்டு  னா ஏசப்பா..
"ரௌ"ண்டு னா கத்திபாரா..
'8' அது நல்லா பார்ரா 

சினிமா னா கோடம்பாக்கம்..
கிரிக்கெட் க்கு சேப்பாக்கம்..
ஊரோரமா ஊரப்பாக்கம்..
இங்க எல்லா பொண்ணும் உன்ன பாக்கும்..

வாழ வைக்கும் இது எங்க ஊரு..
அதான் சென்னைனு இதுக்கு பேரு..
"செ"ழிக்க வைக்கும் "அன்னை" இவ பாரு..!
போதும் மச்சி.. சொல்லு ஒரு மோரு.. ! ;-) B-) 

காதல் க(வி)தை




காதல் க(வி)தை



தேடல்:

என் பாவையின் துணையுடன் வாழ்வேனோ?- இல்லை 
அவளை பார்திடாமலே மாய்வேனோ?

காணல்:

உன் விழியிரண்டின் பேரழகை வியந்து கண்ட நொடி,
விலகாது என் நெஞ்சில் பதிந்து கொண்டதடி.

நினைத்து ஏங்குதல்:

உன் புன்னகையில் நெஞ்சை புதைக்கின்றாய்.
புன்சிரிப்பால் ஏனடி வதைக்கின்றாய். 

காதல்:

வாழும் நொடி பொழுது யாவும்
உன் துணை அதிருந்தாலே போதும்!
கூறாயோ இது காதல் என்று..?
வாராயோ என் கையில் இன்று...?

வர்ணித்தல்:

உன் அழகினிலே கொஞ்சம், அடைய இயற்கை தாயும் கெஞ்சும். 
அதை கூறிடவே சொற்களுக்கு தமிழிலேயே பஞ்சம்.

சிரித்தல்:

உன் புன்சிரிப்பு போதும், என் நாடி நரம்பு யாவும்
மின்சாரம் பாய்ந்தது போல் துள்ளி விளையாடும்

முத்தம்:

உன் இதழ்கள் மிதக்கும் செம்முகிலினமா? அதன்
முத்த மழை என் மேல் பொழிந்திடுமா?

செல்ல மோதல்:

ஏசிடு பெண்ணே உன் கோபம் தீர- அனால் 
பேசிடு பின்னே என் நெஞ்சம் ஆற.
தேரி விடும் உள்ளம் நீ திட்டி விட்டாலும்- அனால் 
ஆறிடுமோ மனதில் உன் மௌனத்தின் காயம்? 

பிரிவில் ஏங்குதல்:

உன் பூமுகம் காட்டிட மாட்டாயோ? அழகில் 
சொக்கி மயங்கும் வரம் ஈட்டாயோ?

வாழ்தல்:

என் மார்பில் நீ என்றும் சாய.. உன் அன்பிலே நானும் தோய..
இந்நெருக்கம் காணாது மாய்வு.. நம் காதல் அலைக்கேது ஓய்வு..

நீங்குதல்:

என்னோடு இருப்பாய் எங்கும் போகாது.
அருகில் நீ வேண்டும் என்றும் நீங்காது.
என் உடல் நோகும் உன்னை அணைக்காது.
உன்னை காணாமல் என் உயிர் பிழைக்காது.

விரிசல்:

என் கை உன் கைகளை பிடித்திடுமோ? இல்லை  
என் கண்களின் கண்ணீரை துடைத்திடுமோ?

விலகல்:

நெஞ்சில் நீங்காத ஓர் பாரம்- தந்து 
விலகி போவாயோ தூரம்?
நீ விட்டுச் செல்லும் அந்த நேரம்.
கண்ணில் வடியும் நீரல்ல உதிரம்.

பிரிதல்:

உன் பாதச் சுவடுகள் மறையும் வழியே
என் காதல் நினைவுகள் தொலைந்திட நின்றேன்.

என் பெண்ணே!



என் பெண்ணே!




வண்ணமயில் போலாடும் தேவமுகப் பெண்ணே- உன்
எழில்பொங்கும் பேரழகை கூற வந்தேன் கண்ணே.

உனைப் பாடுவதற்காக மனம் துடிதிருந்ததற்காக- உன்னை
கண்முன்னே நிறுத்தி இந்த அணி சேர்த்தேன் உனக்காக.

உன் அழகினிலே கொஞ்சம், பெற இயற்கை தாயும் கெஞ்சும்
அதைக் கூறிடவே சொற்களுக்கு தமிழிலேயே பஞ்சம்.

தேவதையா நீ? இல்லை. பேரழகா? அதும் இல்லை.
இறைவன் அவன் தானே கண்டெடுத்த பிள்ளை.

உன் விழியிருந்து பாயும் பல மின்கதிர்களின் மாயம்- அதை
கண்டிருக்க என் காத்திருப்பு என்று தான் ஓயும்

சொக்க வைக்கும் உந்தன் பூமுகமதனைக் கண்டு
தவிடுபொடி ஆகி போன நெஞ்சம் பல உண்டு.

உன் புன்சிரிப்பு போதும், என் நாடி நரம்பு யாவும்
மின்சாரம் பாய்ந்தது போல் துள்ளி விளையாடும்.

கொஞ்சும் குரலின் மயக்கம். பேர்  இசையாவும் தோற்கும்- அதைக் 
கேட்டிருந்தாலே போதும் என் பிணி யாவும் விலகும்.

மெலிதாய் வளையும் உன் இடை எனும் பொற்கொடியில்
வலிய வந்து சிக்கிக்கொண்டேனே ஒரு நொடியில்.

கறுநீரைப் பொழியும் போல் உள்ள குழலோ ஓர் அருவி-அந்த 
கார்கூந்தல் விரித்தாடும் பதுமை நீ, என் அழகி

மெல் இதழ்களென்ன மிதக்கின்ற செந்நிற முகிலினமா? அதன் 
முத்த மழை எந்நாளும் பொழிந்து என் மேல் விழுமா?

என் மனம் நிறைந்த பதுமை! பூமி கண்டிராத அழகை
விரைவில் கொண்டு சேர்ப்பாய் என்னிடம் இறைவா நீ