Sunday, 20 July 2014

எட்டியதும் கிட்டியதும்..


எட்டியதும் கிட்டியதும்..


சிறகுகள் கட்டி விண்ணில் பறந்தேன்.. 
சீறி சூரியனை நோக்கி விரைந்தேன்..
கட்டிய சிறகோ மெழுகென மறந்தேன்.. அது 
உருகி விழுந்திட நெஞ்சம் கரைந்தேன்.

கனவுகள் வளரும் முட்டைகள் இட்டு
கண்களெனும் கூட்டில் அடை காத்திட்டு.. அவை
பொறியும் நேரம் நெருங்கிட, கலைந்தது
கூடு, முட்டையெல்லாம் நொறுங்கி உடைந்தது..

ஆசையெனும் மது தரும் போதையிலே..
அண்டம் மறந்து மிதக்கும் வேளையிலே..
உடமையெல்லாம் உலகம் உருவி கொண்டது.. சிறு
உடையும் இல்லாது தெருவில் விட்டது..

வாழ்வெனும் மரத்தின் மகிழ்ச்சிக் கனிதனை..
வசமாக்க எண்ணி உடைத்தேன் என் மனதினை.. அது
எட்டாக் கனியென புரியாதது ஏனோ? 
என் தரத்தை நானே அறிந்திடத்தானோ?

ஆசை கொள்வதெல்லாம் முடிவில் அழுதிடத்தானோ?
கனவெல்லாம் விழிகளில் வசிக்கும் வெறும் கற்பனையோ?
"இன்பமயம்" என்பது  ஏட்டுச்சொல் தானோ?
ஆழ்கடலில் ஆற்று மீனை தேடுகிறேனோ?

No comments:

Post a Comment