முண்டாசுக்கவி
முறுக்கி விட்ட மீசையும், முண்டாசும் வேட்டியும்
அடிமை பூட்டை உடைத்தெறியும் சொற்களெனும் ஈட்டியும்
ஏந்தி இவன் பாடி வர மாற்றம் கண்டது இப்புவி.
தமிழ் மொழியின் புதுக்கவிதை சின்னம், இவன் "மகாகவி"
ஜகத்திலே உளோரெல்லாம் வீறு கொண்டு எழுந்திட.
அகத்திலே புரட்சி தீ எரிந்து நம்மை விழுங்கிட
முகத்திலே துணிச்சலோடு ஒளி படைத்த கண்ணுடன்
கிரகத்தில் யாரும் கண்டிரா பல கவி படைத்த நாயகன்.
"நிறத்தினால் சக தோழர் தாழ்ந்துதான் போவரோ?"
"புறத்தினால் பிரித்து வைக்கும் நீயும் என்ன மூடரோ? " என
சிரத்திலே உறைக்குமாறு கேள்வி பல கேட்டவன்.
கரத்திலே கோலேந்தி சாதி களை எடுத்த பாடகன்.
அணை உடைக்கும் வெள்ளம் போல் பொங்கிடும் காதல் ராகம்
துணை இவனே கன்னனுக்கென இவன் கொண்ட மோகம்
"உனை பாடிடவே தோன்றினேன், நித்தம் ஜபிப்பேன் உன் நாமம்" என்ற
இணையில்லா இவன் பாடல்களால் நெஞ்சிலே காதல் தாகம்.
குருதியெல்லாம் பொங்கிட விடுதலைக்கே ஏங்கிட
உறுதியோடு நின்று நம் உரிமைக்கு போராடிட
இறுதி மூச்சு உள்ள வரை இடைவிடாது உழைத்தவன். நம்மை
இணைத்திடும் பல பாட்டு படித்த கவி, இவன் மாவீரன்.
வில்லுக்கோர் விஜயன், தமிழ் சொல்லுக்கோர் அகத்தியன்.
படை என்றால் சோழன், கொடை எனில் பாரி வேந்தன்.
குறளுக்கு வள்ளுவன், கீதைக்கு பார்த்த சாரதி.
எத்துனை யுகமாயினும் தமிழ் பாட்டுக்கென்றும் "பாரதி"
No comments:
Post a Comment