வாய் திறவாய்
'பேசு' 'செப்பு' 'சொல்' 'உரை' 'கூறு'-உன்னை
பேசச் சொல்லிடவே தமிழில் சொற்கள் பல நூறு!
ஊக்கச்சொல் ஒன்றால் துவண்டவன் எழ.. உன் பேச்சால்
உறங்கும் மனங்களெல்லாம் முயற்சியை தொழ.. அந்த
வார்த்தைகளின் வலிமை வெற்றி வழியை காட்டும்..இரவினை பகலாக்கி இருளினுள் ஒளிக்கதிரூட்டும்..
எழுச்சி சொற்கள் பகுத்தறிவு தீயை தூண்டிட-மக்கள்
மனக்குகையில் சிறுத்தை எழ, சமத்துவத்தை வேண்டிட.
பேசிடவே நெஞ்சமெல்லாம் விடுதலைக்கே துடித்திட-உன்
பேச்சினால் நகர்ந்து பெரும் மக்கட் புரட்சி வெடித்திட..
செவியதன் கேள்வி, விழியுறை காட்சி-இவை
ஏதும் அடக்குமோ உன் புலன்களின் ஆட்சி?
உன் சுதந்திரமெல்லாம் நீ உரைக்கும் சொல்லாகும்-அதை
அறிந்து பேசினால் அதுவே விஜயன் வில்லாகும்!
No comments:
Post a Comment