Wednesday, 31 December 2014

சினம் கொள்ளடா!!


சினம் கொள்ளடா!!


பாகன் கோற் கிணங்க...
   பாய் போலுடல் மடங்க..
பாயும் வேங்கை பணியும்..
   பயமதை கண்ணில் அணியும்..

அடிமைத்தனம் மறுக்க.. அது
   அச்சக் காப் பறுக்க..
அகக் கூண் டுடைய..
   ஆறா சினமது அடைய....

பிணி துறந்த புலி.. பாருடன்
   பிணைந்து ஏற்கேன் வலி..
பரிதவிக்கிறேன்! காண, இக்காட்டை,
   பாகனிடம் படும் பாட்டை..

செவி சாயேனே வணங்கி..
   செய்யேன் அவன் சொற்கிணங்கி
செல்லிட மெல்லாம் கொள்வேன்..
   செம்முகமோடு உறுமச் செல்வேன்..

சினமது பொங்கி வழிய.. விழியில்
   சிக்கிய யாதும் அழிய..
சிந்தையில் போர்கள் வெடிக்க.. சொல்லால்
   சிதைக்க நாவது துடிக்க..

கட்டியெனை ஆள துண்ணிடுவாயோ! காலக்
   கரமதில் விலங்கிட எண்ணிடுவாயோ!
கழிவறை காகிதமாய் போகேன்! நின்
   காலணித் துடையென்றும் ஆகேன்!

குற்றம் பல இழைக்க.. எனை
   குணியச் சொல்லி அடிக்க..
குறுகியடி பணிவேனென நினைக்க..
   குமுறி எரிமலையாய் நான் வெடிக்க..

சிதறடித்துன் செருக்கை அழிப்பேன்!
   சிறுதுளியேனும் புரட்சித் தேனளிப்பேன்!
சினமே என் போர்வாள்! என்றும்
   சிரமது காணாது உன் தாள்!

Monday, 29 December 2014

தளராதே தளிரே !!!



தளராதே தளிரே!!!


விழி பிதுங்கி நின்று நீயும் 
கலி என்று குறை கூறி 
பழி பல ஏற்று நின்று 
வழி தவறி சென்றதேனோ ?

வேலை தேடி அலைந்த நீயும் 
கிளை தாண்டும் குரங்காக 
வேளை உணவு கிடைக்காமல் 
சிலை போல் அசைவிழந்ததேனோ ?

பயிற்சி பல மேற்கொண்டு 
அயர்ச்சி அடையாத நீ 
முயற்சி சிலவே மேற்கொண்டு 
தளர்ச்சி அடைந்ததேனோ ?

ஞாலம் அது சுற்றுவதைக் கண்டு 
காலம் அது மாறுமென நம்பு 
பாலம் ஒன்று வானிற்குக் கட்டி 
வர்ணஜாலம் பல அமைத்திடு - வெற்றிக்கொடி நாட்டி !

மை தீர்ந்த பேனா .....


மை தீர்ந்த பேனா ....


பொய் தீர்ந்து போன என்னால்
காதல் கவிதை தீட்ட முடியாமல் போக

மெய் தீரவில்லை....படைத்திடுவாய் 
புதுக்கவிதை ஒன்று நீயாக - என

கை பிடித்து உணர வைத்த 
எனது மன சாட்சிக்காக

வாய் சொல்லும் இக்கவிதையைப் 
படித்திடுவாயோ என் வாசகனாக

காய் பழுத்து பழமாகும் 
வரை காத்திராதே...

வேர் விடும்போதே  உன் 
வியர்வை சிந்தத் தொடங்கட்டும்

அதுவே போர்க்களத்தில் உன் உதிரம் 
சிந்தவிடாமல் பிடித்துக் கொள்ளும் பாத்திரம்

மை தீர்ந்து போவது - நீ
உன் சிந்தனையை சிறை பிடிக்க அல்ல

அதுவே நீ ஓடப்போகும் தூரத்தை 
கணிப்பதர்க்கான அளவுகோல் !!

இது யார் பாடல் ??




இது யார் பாடல் ??



அர்த்தங்கள் ஆயிரம் சொல்லும் 
கண்ணதாசன் பாடல்
அர்த்தநாடமும் ஆடச்செய்யும் 
விஸ்வநாதன் பாடல்
அடிக்கடி கேட்க வைக்கும் 
இளையராஜா பாடல்
அறுபதிலும் ஆறை கவரும் 
வாலி பாடல்
அகிலங்கள் சிலிர்க்க வைக்கும் 
வைரமுத்து பாடல் 

அலையாய் வந்து கரை தீண்டி போகும் 
ரகுமான் பாடல்
அலர்ஜி போல் தோற்றிக் கொள்ளும் 
ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்
அண்ணன் பாசம் உணர்த்த மறக்காத 
யுவன் ஷங்கர் ராஜா பாடல்
அலேக்காய் தூக்கிச் செல்லும் 
அனிருத் பாடல்

Saturday, 20 December 2014

சாதியா? இருக்கா?



சாதியா? இருக்கா?


"உளரும் பேதைக்கு மதியும் பாதி..
உலகமே மாறிடிச்சு! எங்கேடா சாதி.?
உறவாய் வாழும் இத்தேச வாசி..
உடைக்காதே ஒற்றுமையை சாதி பேசி!"--
"உண்மையா சொல்லு! இருக்காடா சாதி?"

ஏதும் அழுக்கற்று துவைத்திடு சாக்க..
ஏனின்னும் 'மாமி' வரல சமைக்க.?
ஏம்மா 'பிரியா' பாத்ரூம அலம்பிறேன்..
ஏங்க! 'ஐயர் மெஸ்'ல வாங்கி வரேன்..--
"ஏன்டா! இதுலயா இருக்கு சாதி?"

வா 'ராஜா' இல்லத்துள் வந்தமரு..
வரண்டிருக்கும் நா.. சொம்பு நீரருந்து..
வரேன்! இந்த சொம்ப 'அலம்பிடுறேன்'..
வாடகைக்கு 'பிராமணா' யாராச்சு காட்டிடேன்..--
"வர்ணம், சாதிலாம் எங்கயும் இல்லடா!"

பறையன் பாதிய பிடுங்கிக்கிறான்! பார்ப்பீர்!
பார்ப்பனர் நிலையென்ன!? நன்றாக கேட்ப்பீர்!
பாரதத்தில் இல்லையே திறனுக்கு மதிப்பு!
ஃபாரினுக்கு போனாதான் ஓடும் பிழைப்பு!--
"பாவி! சாதியா? இது நியாயம்!"

'சாமி', சலவைக்கு ஏதாச்சும் துணி?
'சாமி', வேணுமா? வாங்குங்க! எக்கனி?
'சாமி', சார்ட்டா? மீடியமா? முடி?
'சாமி', பரிகாரம் பண்ணுவது எப்படி?--
"சாமீ...! சாதி எங்க? சொல்லுடா!"

சேரி! செல்ல வேண்டாம் அவ்வழி..
சேறு, சாக்கடை, நாற்றம்! அம்மாடி!
'சேமமே' இல்லா மனுஷா! இவா நடுவுல..
சேவிக்கும் பகவான் காப்பார் நம்பள!--
"ச்சேரீ.. இதுவா சாதிக் கொடும?"

உண்பது சாம்பார், ரசம், மோரு..
உலகமே சைவமா மாறுது பாரு..
உயர்ந்தது! சத்துகள் நிறைந்ததோடு.
உடலுக்கு என்றும் உகந்த சாப்பாடு..
"உணவுலையா இருக்கு சாதி?"

ஆருயிரே நினை நீங்க மனமில்லை..
அம்மா 'நம்மவாள கட்டிக்கோ'னு தொல்லை..
அதனால காதல் வாழ்வை மறந்திடலாம்!
அடுத்த ஜென்மத்தில் பிறப்பால் சேர்ந்திடலாம்!--
"ஆனா.. இது சாதின்னா அர்த்தம்?"

"பூநூலுடன் பார்ப்பனன் இணைந்ததுபோல் இம்மடமை..
புதுவுலகுடன் பின்னியது சாதிக் கொடுமை..
'புரியலயாடா? நீ என்ன பறப்பயலா?'
புண்ணியம் தரும் இத்தகைய செயலா?"--
"புரியுது! ஆனாலும் சாதி இல்லல?"