அந்த அழகிய மாலை பொழுது..
கரிய மேகங்கள் கண்ட மயில் போல்
வாடைக் காற்றில் அசைந்தாடும் கிளைகள்..
காதல் கொண்ட இளைஞனின் மனம் போல்
காற்றில் பறந்தாடும் வாடிய இலைகள்..
இருளை கூட்டி வரும் குளிர்ந்த இரவை
அஞ்சி கூட்டிற்கு ஓடிடும் பறவை..
இந்த அழகு மாலையில்
நகரச் சாலையில்
உலகையே மறந்து நான் நடை போட..
எங்கோ கேட்டிடும்
இன்ப ஓசையில்
மனமது நெகிழ்ந்து இமைகள் மூட..
பருவ நங்கையின் அழகு புருவமோ
அந்தி மாலையில் தோன்றிடும் பிறை ..?
மழலைக் கண்ணனின் திரு உருவமோ
கொஞ்சி விளையாடும் சிறுவர் படை..?
கண்களை பறித்திடும் பூக்களின் வாசம்..
ஊரெங்கும் பூக்குது காதல் நேசம்..
சில ஓவியம்..
பல காவியம்..
எதும் கூறிடாது இந்த அழகை..
இந்த தருணம்..
நாளும் வரணும்..
சொர்க்கம் ஆக்கணும் இந்த உலகை..
முக்கனிச் சுவையை கூட்டிடும் தேன் போல்
பாடிடும் குயிலின் இன்னிசை இராகம்..
கதிரவன் முகத்தை மறைத்திடும் மலைகள்-அந்த
காட்சியை காணவே நெஞ்சினில் மோகம்..
பொன்மாலை இதை போற்றும் என் கானம்-அதை
கேட்டு நாணத்தில் சிவக்கும் கீழ்வானம்..
இந்த இன்ப மாலையில்..
எழில்மிகு வேளையில்..
தனிமையில் இன்பம் காண்பதா அழகு.?
பேசி களிக்க..
மனம் விட்டு சிரிக்க..
புதுப்புது உறவை தேடிப் பழகு.. ;)