Saturday, 25 October 2014

தேவதையின் முதல் பார்வை


தேவதையின் முதல் பார்வை

இளவேனிற் காலம், விடியற் காலை நேரம்..
காற்றை துணை கொண்ட நடை சாலை ஓரம்..
குடிலொன்றின் வாசலில் அக்கன்னியைக்  கண்டேன்.
கதிரவன் உதித்திட நான் உரைந்து நின்றேன்..

முகில் கிழிக்கும் எல்லொளி கண் கூச..
முடித்திரை நீங்கி உன் பார்வை என் மேல் வீச..
அதிகாலை நிலா விரைந்து மறையக் கண்டேன்..
அம்மதியைத் தாண்டிய நாணம் நான் கொண்டேன்..

காவியங்கள் உன் மீது படைக்கச் செய்வாயோ? அதை
பாட எண்ணிட, பார்வையால் சுவாசம் கொய்வாயோ?
குயிலை அழைத்தேன் உன் மேல் கானம் இயற்ற..
அது கூறியதா என் காதல் கூற்றை?

இறை நூறும் அளிக்கும் அருட்காட்சி..
மறை நான்கும் செப்பும் மனதின் இறையாட்சி.. யாவும்
கண்டேன் அக்கள்ளியின் கயல் விழியில்..  பல
காலத் தவ மோட்சம் கிட்டியது நொடியில்..

களிப்புற்று விண்ணில் உலாவும் புள்ளினம்.. அவள்
கண்டதும் அவையோடு சேர்ந்து பறந்ததே என் மனம்..
நெகிழும் தேன்மலரை சேரும் வண்டின் தாகம்- அது போலே
என் நெஞ்சம் அவள் மேல் கொண்ட பெரும் மோகம்..

விழியிருந்து பாய்வது காதல் வாளோ? அதை
வீசி என் நெஞ்சை சிறை எடுத்தாளோ?
பதுமை, இவளென் தேவதையாய் ஆகிடனும்.. மேனி
வருடுவது காற்றல்ல அவள் விரல்களாய் மாறிடனும்..

எழில் தீயே என்றாயினும் உனை நெருங்கிடுவேனோ?
என்றும் அதில் குளிர் காயும் வரம் பெறுவேனோ?
முனையாது உன்னழகில் வாய் பிளந்திடுமோ? அதை
மூடிட உன் செவ்விதழ்கள் முன் வந்திடுமோ?

Friday, 10 October 2014

வாய் திறவாய்

 

வாய் திறவாய்

'பேசு' 'செப்பு' 'சொல்' 'உரை' 'கூறு'-உன்னை
பேசச் சொல்லிடவே தமிழில் சொற்கள் பல நூறு!
வாய் திறந் தெதையும் உரைக்கலாம் என்ற வலிமை
வாழ்கை நமக்கு அளித்திட்ட மிகப்பெரும் உரிமை.

இனிச்சொல்லால் புன்னகை பரவிடுமே பல திக்கும்
கனிச்சுவை சேர் தேன் கலந்த சுவை கடந்து தித்திக்கும்..
சிந்தை கொண்ட இன்னலெல்லாம் மறந்து மனம் நெகிழும்
உவகைப்பூ பூத்து அளவில்லாது நெஞ்சம் மகிழும்..

ஊக்கச்சொல் ஒன்றால் துவண்டவன் எழ.. உன் பேச்சால்
உறங்கும் மனங்களெல்லாம் முயற்சியை தொழ.. அந்த
வார்த்தைகளின் வலிமை வெற்றி வழியை காட்டும்..
இரவினை பகலாக்கி இருளினுள் ஒளிக்கதிரூட்டும்..

எழுச்சி சொற்கள் பகுத்தறிவு தீயை தூண்டிட-மக்கள்
மனக்குகையில் சிறுத்தை எழ, சமத்துவத்தை வேண்டிட.
பேசிடவே நெஞ்சமெல்லாம் விடுதலைக்கே துடித்திட-உன்
பேச்சினால் நகர்ந்து பெரும் மக்கட் புரட்சி வெடித்திட..

செவியதன் கேள்வி, விழியுறை காட்சி-இவை
ஏதும் அடக்குமோ உன் புலன்களின் ஆட்சி?
உன் சுதந்திரமெல்லாம் நீ உரைக்கும் சொல்லாகும்-அதை
அறிந்து பேசினால் அதுவே விஜயன் வில்லாகும்!